திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.118 திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)
பண் - வியாழக்குறிஞ்சி
சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர அரைக்கசைத்தான்
இடுமணி யெழிலானை யேறலன் எருதேறி
விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப்
படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.
1
நோய்புல்கு தோல்திரைய நரைவரு நுகருடம்பில்
நீபுல்கு தோற்றமெல்லாம் நினையுள்கு மடநெஞ்சே
வாய்புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலைவணங்கிப்
பாய்புலித் தோலுடையான் பருப்பதம் பரவுதுமே.
2
துனியுறு துயர்தீரத் தோன்றியோர் நல்வினையால்
இனியுறு பயனாதல் இரண்டுற மனம்வையேல்
கனியுறு மரமேறிக் கருமுசுக் கழையுகளும்
பனியுறு கதிர்மதியான் பருப்பதம் பரவுதுமே.
3
கொங்கணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான்
எங்கள்நோய் அகலநின்றா னெனவரு ளீசனிடம்
ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகழித்த
பைங்கண்வெள் ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே.
4
துறைபல சுனைமூழ்கித் தூமலர் சுமந்தோடி
மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச்
சிறையொலி கிளிபயிலுந் தேனினம் ஒலியோவா
பறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே.
5
சீர்கெழு சிறப்போவாச் செய்தவ நெறிவேண்டில்
ஏர்கெழு மடநெஞ்சே யிரண்டுற மனம்வையேல்
கார்கெழு நறுங்கொன்றைக் கடவுள திடம்வகையால்
பார்கெழு புகழோவா பருப்பதம் பரவுதுமே.
6
புடைபுல்கு படர்கமலம் புகையொடு விரைகமழத்
தொடைபுல்கு நறுமாலை திருமுடி மிசையேற
விடைபுல்கு கொடியேந்தி வெந்தவெண் ணீறணிவான்
படைபுல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே.
7
நினைப்பெனும் நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே
மனத்தினை வலித்தொழிந்தேன் அவலம்வந் தடையாமைக்
கனைத்தெழு திரள்கங்கை கமழ்சடைக் கரந்தான்றன்
பனைத்திரள் பாயருவிப் பருப்பதம் பரவுதுமே.
8
மருவிய வல்வினைநோய் அவலம்வந் தடையாமல்
திருவுரு அமர்ந்தானுந் திசைமுகம் உடையானும்
இருவரும் அறியாமை எழுந்ததோ ரெரிநடுவே
பருவரை யுறநிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.
9
சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்
குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின் குஞ்சரத்தின்
படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.
10
வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான்
பண்செலப் பலபாடல் இசைமுரல் பருப்பதத்தை
நன்சொலி னாற்பரவு ஞானசம் பந்தன்நல்ல
ஒண்சொலின் இவைமாலை யுருவெணத் தவமாமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com